தமிழகத்திற்கே முன்னுதாரணம் - ஏற்காடு தொகுதியில் 100% வாக்குப்பதிவு.. கெத்து காட்டிய மலைக் கிராம மக்கள்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் உள்ள ஒரு குக்கிராமம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட கொம்புத்தூக்கி என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளனர். இந்த கிராமத்தில் மொத்தம் 301 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பட்டியலில் உள்ள 301 வாக்காளர்களுமே வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஏற்காடு தொகுதியில் 91.80% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கொம்புத்தூக்கி கிராமத்தின் இந்த 100% சாதனை தேர்தல் அதிகாரிகளிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் கூடத் தவிர்க்காமல் அனைவரும் வாக்களித்தது மற்ற தொகுதிகளுக்கு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக வீரபாண்டி தொகுதியில் 93.41 சதவீதமும், குறைந்தபட்சமாகப் பாளையங்கோட்டையில் 68.97 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.