அறிவிக்கப்படாத மின்வெட்டால் 1,000 கோழிகள் உயிரிழப்பு.. விருதுநகரில் தொடர் இழப்புகள்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பகுதியில் ஏற்பட்ட தொடர் மின்தடையின் காரணமாக, கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள கொங்கன்குளத்தில் கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் அறிவிக்கப்படாத விநாடி நேர மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.
மின்சாரம் இல்லாததால் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த மின்விசிறிகள் இயங்கவில்லை. இதன் காரணமாகக் கோழிப்பண்ணைக்குள்ளே கடுமையான வெப்பம் நிலவியதுடன், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த விபத்தினால் தனக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிக்குத் தமிழக அரசு உடனடியாகத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இதுபோன்று அறிவிக்கப்படாத மின்தடை இனி ஏற்படுவதைத் தடுத்து தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.