10, 12-ம் வகுப்பு மாணவர்களே கவனம்! பிறப்பு சான்றிதழில் உள்ளபடியே பெயர் இருக்க வேண்டும்.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் பெயர், பிறப்புச் சான்றிதழில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதேபோன்று எந்தவித எழுத்துப் பிழையும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் பெயருக்கும் இனிஷியலுக்கும் இடையில் புள்ளி வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஒரு இடைவெளி மட்டும் விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு இனிஷியல்கள் இருந்தால் அவற்றுக்கு இடையிலும் ஒரு இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும்.
மேலும், மாணவர்களின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும்போது இனிஷியலும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும், தமிழ் விவரங்கள் Unicode முறையில் பதிவிடப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உறுதி செய்ய பிறப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விவரங்களை EMIS உள்ளிட்ட இணையதளங்களில் பதிவேற்றும்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்களை பள்ளிகள் மீண்டும் சரிபார்த்து, ஆவணங்களில் உள்ளபடியே பதிவேற்றம் செய்வது அவசியமாகியுள்ளது.