10 வது மாடியிலிருந்து விழுந்து ஐந்து வயதுக் குழந்தை பரிதாப பலி... கதறித் துடித்த பெற்றோர்!

 

டெல்லியின் கல்காஜி பகுதியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் மிதுன் தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் அனைவரும் பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இரவு பத்து முப்பது மணியளவில் குழந்தை தூங்கிய பின்னர் மிதுன் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் உள்ள மற்றொரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை, பெற்றோர் இல்லாததால் பால்கனி பகுதிக்குச் சென்று கீழே எட்டிப்பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அந்த ஐந்து வயதுக் குழந்தை பத்தாவது மாடியிலிருந்து நேராகக் கீழே விழுந்து பலத்த காயமடைந்தது.

குழந்தை கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த பெற்றோர், ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பால்கனியில் பாதுகாப்பு இரும்பு வேலிகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.