நள்ளிரவில் பயங்கரம்: கள்ளக்காதலி, 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை - தப்பியோடிய கள்ளக்காதலன் தூக்கிட்டுத் தற்கொலை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 10 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா (33) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகன் கிஷாந்துடன் (10) வசித்து வந்தார்.
ஓமலூரில் உள்ள ஒரு பிரபல ஷோரூமில் வேலை பார்த்து வந்த சத்யாவிற்கும், அதே ஷோரூமில் மேலாளராகப் பணியாற்றி வந்த அஸ்தம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவரை உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்குச் சத்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சத்யாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சத்யாவின் மணிக்கட்டு துண்டானது.
தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த 5-ம் வகுப்பு மாணவன் கிஷாந்தையும் அந்த மிருகம் விட்டு வைக்கவில்லை. சிறுவனின் தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் அவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வருவதற்குள் சக்திவேல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை பலனின்றி சத்யாவும் உயிரிழந்தார்.
இதனிடையே போலீசார் சக்திவேலைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வெள்ளாளப்பட்டி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரைக் கொன்று விட்டு, குற்றவாளியும் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலால் ஒரு பிஞ்சுச் சிறுவனின் உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.