துருக்கியில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 11 மாணவர்கள் படுகாயம்!

 

துருக்கி நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் மேற்கே அமைந்துள்ள மணீசா மாகாணத்தில் உள்ள பள்ளிக்கு மாணவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் சென்று கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு வகுப்புகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. தகவல் அறிந்ததும் அவசரகாலக் குழுவினரும், காவல்துறையினரும் விரைந்து சென்று காயமடைந்த 11 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் துருக்கி நீதிமந்திரி அகின் குர்லன் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் மட்டுமின்றி, அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் அவரது பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

துருக்கியில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் ஏற்கனவே நடந்த வேறுவேறு சம்பவங்களில் மாணவர்களும் ஆசிரியரும் உயிரிழந்ததுடன், மற்றொரு தாக்குதலில் 16 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.