அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி.. மதுராந்தகத்தில் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேலகண்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பயின்றுவரும் மாணவர்களுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் உடல்நலத்தில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.