விஜய் பிரசாரத்தில் விதிமீறல் - 11 தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு - ஒரே நாளில் 5 விபத்துகள்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று தென் மாவட்டங்களில் நடத்திய ‘ரோடு ஷோ’ பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் அடுக்கடுக்கான விதிமீறல்கள் தொடர்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 11 கட்சி அமைப்பாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் நேற்று தேர்தல் பிரசாரத்திற்காகத் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர், தாழையூத்து பகுதி, வண்ணாரப்பேட்டை இடங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் ரோடு ஷோ நடத்தினார்.
விஜய்யின் வாகனத்தைப் பின் தொடர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், போக்குவரத்து விதிகளைப் பொருட்படுத்தாமல் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த விதிமீறல்களால் நேற்று ஒரே நாளில் 5 இடங்களில் விபத்துகள் நிகழ்ந்தன. இது குறித்துப் பேசிய நெல்லை சரக டிஐஜி சரவணன், "பிரசாரத்தின் போது முறையான அனுமதி விதிகளைப் பின்பற்றாதது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த வகையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக அமைப்பாளர்கள் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜக நிர்வாகி குஷ்பு சுந்தர், விஜய் தனது பிரசாரக் கூட்டங்களில் ஒழுங்கற்ற முறையில் கூடும் கூட்டங்களைச் சரி செய்ய வேண்டும் என விமர்சித்திருந்த நிலையில், தற்போது காவல்துறையினர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை த.வெ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைத் தொண்டர்கள் முறையாகப் பின்பற்றத் தவறுவது கட்சிக்கு நெருக்கடியை உருவாக்கி வருகிறது.