ரூ.2.6 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளி பரிசுப் பொருட்கள் பறிமுதல் - சேலத்தில் பறக்கும் படை ‘வேட்டை’!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் விநியோகிப்பதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ரூ.2.6 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் வடக்குத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயந்தி தலைமையிலான குழுவினர், நேற்றிரவு செவ்வாய்ப்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்திச் சோதனை செய்தனர்.
காரின் உள்ளே பார்த்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டுக் கட்டாக வெள்ளிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 112 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள், அரைஞான் கொடிகள் மற்றும் வெள்ளி குத்து விளக்குகள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த வெள்ளிப் பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 60 லட்சம் ஆகும்.
காரில் இருந்த செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி சுந்தர்ராஜன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "வியாபாரத்திற்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்கிறேன்" என அவர் விளக்கமளித்தார். இருப்பினும், அவ்வளவு பெரிய தொகைக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்து மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனர். "உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டுப் பொருட்களைப் பெற்றுச் செல்லலாம்" என வியாபாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.