அமெரிக்காவில் 115 டிகிரி பாரன்ஹீட் வெப்ப அலை; வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின அணிவகுப்பு ரத்து!
அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டுத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடைபெறவிருந்த உலகப் புகழ்பெற்ற சுதந்திர தின முதன்மை அணிவகுப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டுச் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முற்றிலும் களையிழந்தன.
தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய மாகாணங்களில் வாழும் சுமார் 16 கோடி மக்களுக்குப் பருவநிலைத் துறை கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனில் சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் பிரம்மாண்ட சுதந்திர தின அணிவகுப்பு துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அந்தச் சமயத்தில் வெப்பத்தின் அளவு 110 முதல் 115 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 46°C) வரை உயரும் என வானிலை மையம் கணித்ததால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அணிவகுப்பை முற்றிலும் ரத்து செய்தனர்.
இதேபோல நியூயார்க் நகரிலும் கடுமையான வெயில் கொளுத்தியது. அங்கு வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அமெரிக்கச் சுதந்திர தினப் பாதுகாப்பு மற்றும் கொண்டாட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பலர், இந்த அதீத வெப்பத்தின் தாக்கத்தைத் தாள முடியாமல் மைதானங்களிலேயே தவித்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நிலைமையைச் சமாளிக்க அமெரிக்கா முழுவதும் நகரம் எங்கும் அவசரக்காலக் 'கூலிங் மையங்கள்' அமைக்கப்பட்டன. பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏதுவாகப் பொது நீச்சல் குளங்கள் செயல்படும் நேரமும் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
வாஷிங்டன் நேஷனல் மால் பகுதியில் திரண்டிருந்த மக்களுக்குத் தன்னார்வலர்கள் ஐஸ் பக்கெட்டுகளில் வைக்கப்பட்ட வாட்டர் பாட்டில்களை விநியோகித்தனர். பொதுமக்கள் குடைகள் மற்றும் தொப்பிகளுடன் வெயிலில் அலைந்ததைக் காண முடிந்தது. அமெரிக்காவை உலுக்கி வரும் இந்த அதீத வெப்ப அலைக்குக் காரணம் 'எல் நினோ' பசிபிக் பெருங்கடல் மாற்றங்கள் தான் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வெப்ப அலையினால் அமெரிக்கக் கொண்டாட்டங்கள் சற்று மந்தமடைந்தாலும், உலகத் தலைவர்கள் பலரும் அமெரிக்க அதிபர் மற்றும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். "இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு வெறும் மூலோபாய கூட்டாண்மையைத் தாண்டி, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் இருநாட்டு மக்களின் திறன் ஆகிய பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் வலுவடைந்துள்ளது. 140 கோடி இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகள்" எனப் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.