116 வயதில், 3,550 படிகள் ஏறிச் சென்ற சென்னை மூதாட்டி... திருப்பதியில் நவநீதம்மாவிற்கு விஐபி தரிசனம்.. வைரலான வீடியோ!
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் உள்ள 3,550 படிகளையும் தனது 116 வயதில் நடந்தே கடந்து ஏழுமலையானை வழிபடச் சென்ற சென்னை மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவருக்கு விஐபி தரிசன ஏற்பாடுகளைச் செய்து கௌரவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 116 வயதான நவநீதம்மா என்ற மூதாட்டி, கடந்த மாதம் 15-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்துள்ளார். திருமலைக்குச் செல்ல பேருந்து உள்ளிட்ட வாகன வசதிகள் இருந்த போதிலும், ஏழுமலையான் மீதுள்ள தீவிர பக்தியால் மூதாட்டி நவநீதம்மா படிகள் வழியாகவே செல்ல விரும்பியுள்ளார். தனது குடும்பத்தினருடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் உள்ள 9 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, 3,550 படிகளையும் தனது சொந்தக் கால்களால் நடந்து ஏறி திருமலையை அடைந்துள்ளார்.
இந்த வயதிலும் தளராத நம்பிக்கையுடன் அவர் மலைப்படியேறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய அளவிலும் பெரும் வியப்பையும் வைரலையும் ஏற்படுத்தியது.
முதலில் இந்த மூதாட்டி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று இணையத்தில் தகவல்கள் பரவின. எனினும், இந்த வைரல் வீடியோவைக் கண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அதிகாரிகள், அந்த மூதாட்டி யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்த நவநீதம்மா என்பதும், தற்போது திருப்பதி ஜீவகோணா பகுதியில் வசித்து வரும் தனது மகள் வழி பேரனான திக்பதி (ஆட்டோ ஓட்டுநர்) என்பவரது வீட்டில் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.
மூதாட்டியின் பக்தியை மதிக்கும் விதமாக, அவருக்கு ஏழுமலையானின் சிறப்பு விஐபி தரிசனம் வழங்க தேவஸ்தானம் உடனடியாக முடிவு செய்தது. நேற்று காலை மூதாட்டி நவநீதம்மா மற்றும் அவரது குடும்பத்தினரை அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அலுவலக ஊழியர்கள் நேரில் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் விஐபி பிரேக் தரிசன வரிசை மூலம் எவ்வித சிரமமுமின்றி ஏழுமலையானை மிக அருகில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மூதாட்டி நவநீதம்மா மனமுருகி ஏழுமலையானை வணங்கி வழிபட்டார்.
தரிசனத்திற்குப் பிறகு, திருமலையில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து மூதாட்டிக்கு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்கச் சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா, மூதாட்டிக்குத் தேவஸ்தானத்தின் சார்பில் பட்டு வஸ்திரம் அணிவித்துத் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வாழ்த்தினார். 116 வயதிலும் மலையேறிய மூதாட்டியின் பக்தி உணர்வு திருப்பதிக்கு வரும் பக்தர்களிடையே பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.