36 நாளில் 11வது கொலை... கோவையில் தொடரும் பயங்கரம்... வடமாநில தொழிலாளி கொன்று புதைப்பு!
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டு வரும் காம்பவுண்ட் சுவர் அருகே வட மாநிலத் தொழிலாளி ஒருவரின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட நபரின் கழுத்தில் பெல்ட் இறுக்கப்பட்ட தடயமும், முகம் கல்லால் அடித்து சிதைக்கப்பட்ட நிலயிலும் உடல் காணப்பட்டுள்ளது. இது கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்துச் செட்டிபாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த 36 நாட்களில் நடந்த 11-வது கொலைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.