டெங்கு காய்ச்சலுக்கு 11-ம் வகுப்பு மாணவி பலி; தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சம்!
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 11-ஆம் வகுப்பு படித்து வந்த நஷீதா (16) என்ற பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் - கவிதா தம்பதியின் மகளான நஷீதா (16), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காகப் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த மாதிரிப் பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி மாணவி நஷீதா உயிரிழந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாகப் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 13-ஆம் தேதி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த முகமது இர்பான் (22) என்ற வாலிபரும், கடந்த 23-ஆம் தேதி மூலக்குளம் பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிணி (19) ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
மாணவி நஷீதாவின் மரணத்தைத் தொடர்ந்து டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இனியும் அலட்சியம் காட்டாமல் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரத்துறை செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எந்தெந்தப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது என்பது குறித்துக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.