தமிழகத்தில் 125 நாள் வேலைத்திட்டம்.. இன்று முதல் அமலுக்கு வந்தது!
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைவாய்ப்புத் திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) நடைமுறைப்படுத்தி வந்தது. இந்தத் திட்டத்திற்கு மாற்றாக 'விபி-ஜி ராம் ஜி' என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்' என்ற பெயரில் இத்திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான விரிவான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில் தொழிலாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. கிராமப்புறக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்.
ஒருவேளை 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு வேலையிழப்பு உதவித் தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கும், அதன்பிறகு பாதியும் வேலை இழப்பு உதவித்தொகையாகத் தமிழக அரசால் வழங்கப்படும்.
வேலை செய்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், 16-வது நாளில் இருந்து நிலுவைத்தொகைக்கு நாளொன்றுக்கு 0.05 சதவீதம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு (33%) பெண்கள் இருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பழங்குடியினர், விடுதலையான கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்குச் சிறப்பு வேலை அட்டைகள் வழங்கப்படும்.
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், விவசாயப் பணிகளைப் பாதுகாக்கவும திட்டம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்சகட்ட விவசாயக் காலங்களில் ஆண்டுக்கு மொத்தம் 60 நாட்கள் வரை இந்தத் திட்டப்பணிகள் கிராமங்களில் நடைபெறாது. எந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராம மக்களின் தேவைகளின் அடிப்படையில் கிராம சபையே தீர்மானிக்கும்.
தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். ஒருவேளை 5 கிலோமீட்டருக்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், கூடுதலாக 10 சதவீத கூலி வழங்கப்படும்.
வேலைக்கு வருபவர்களின் வருகை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படும். பணிகள் அனைத்தும் 'ஜியோ-டேக்கிங்' மற்றும் 'ஜி.பி.எஸ்.' தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் திட்டமிடல், கண்காணிப்பு, தணிக்கை மற்றும் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகள் முறையில் மேற்கொள்ளப்படும்.
வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர், ஓய்வெடுக்க நிழல் வசதி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தால், குழந்தைகளைக் கவனிப்பதற்காக ஒரு பெண் தொழிலாளி தனியாக நியமிக்கப்பட்டு அவருக்கும் முழுக்கூலி வழங்கப்படும்.
வேலை செய்யும்போது காயம் ஏற்பட்டால் இலவச மருத்துவ சிகிச்சையும், உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அரசு அறிவிக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இழப்பீடும் வழங்கப்படும். இந்தத் திட்டம் மத்திய - மாநில அரசுகளின் இணைத் திட்டமாகச் செயல்படவுள்ளது. மொத்தச் செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தைத் தமிழக அரசும் ஏற்கவுள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுப் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்திருப்பது கிராமப்புறத் தொழிலாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.