தேனி சிறையிலிருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது... இன்னும் பிடிபடாத 4 கைதிகளுக்கு தனிப்படை வலைவீச்சு!
தேனி மாவட்டக் கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளில் 13 பேரை முதற்கட்ட தேடுதல் வேட்டையிலேயே காவல்துறையினர் பிடித்துள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரைக் கைது செய்ய இன்று 2-வது நாளாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் தாக்கிவிட்டுச் சிறையின் தடுப்புகளைத் தாண்டித் தப்பியோடினர்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே விழித்து கொண்ட காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் அதிவிரைவு எச்சரிக்கை விடுத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். இதில் தப்பியோடிய 17 பேரில் 13 கைதிகள் நேற்றைய தினமே அதிரடியாகப் பிடிக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 4 கைதிகளையும் விரைவாகப் பிடிக்கத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அடங்கிய சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கைதிகள் தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகள் அல்லது மலைப் பாதைகளில் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 2-வது நாளாக இன்றும் வனப்பகுதிகள் மற்றும் மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு இத்தனை கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.