இத்தாலியில் கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குட்டிகளை விட்டதற்கான பின்னணி!
இத்தாலியில் கடல் வளங்களையும் மீன்பிடித் தொழிலையும் அச்சுறுத்தி வரும் நீல நண்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, அட்ரியாடிக் கடலில் லட்சக்கணக்கில் குட்டி ஆக்டோபஸ்கள் விடப்பட்டுள்ளன.
அட்லாண்டிக் பெருங்கடலைப் பூர்வீகமாகக் கொண்ட நீல நண்டுகள், மத்திய தரைக்கடல் பகுதியில் பெருமளவில் ஊடுருவி விட்டன. கடந்த சில ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து, மட்டி உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை அழிப்பதுடன் மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இத்தாலியின் மீன்பிடித் தொழில் மற்றும் சிப்பி வளர்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நீல நண்டுகளின் இயற்கையான எதிரியாக விளங்கும் ஆக்டோபஸ்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் நண்டுகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, போலோனியா பல்கலைக்கழகமும் எமிலியா-ரோமாஞா பிராந்திய அரசும் இணைந்து ‘ஆக்டோ-புளூ’ என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே தற்போது 1 லட்சத்து 30 ஆயிரம் குட்டி ஆக்டோபஸ்கள் கடலில் விடப்பட்டுள்ளன.
தற்போது விடப்பட்டுள்ள ஆக்டோபஸ்கள் சில மில்லிமீட்டர் அளவே உள்ள போதிலும், அவை வளர்ந்ததும் நீல நண்டுகளை வேட்டையாடி உண்ணும். ஆய்வாளர்களின் கணிப்புப்படி, ஒரு கிலோ எடையுள்ள வளர்ந்த ஆக்டோபஸ் சரியான சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 4 நடுத்தர அளவிலான நீல நண்டுகளை உண்ணும் ஆற்றல் கொண்டது.
இத்தகைய இயற்கையான உயிரியல் முறை மூலம் கடலில் நலிந்துள்ள சமநிலையை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருப்பினும், சிறியதாக இருக்கும் ஆக்டோபஸ்களில் பெரும்பான்மையானவை முழுமையாக வளர்ச்சியடையும் முன்பே உயிரிழக்க வாய்ப்புள்ளதால், இந்த முயற்சி எந்த அளவுக்கு முழுமையான பலனைத் தரும் என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் தொடர்ந்து நிலவி வருகிறது.