14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கு... கன்னட நடிகை ரன்யா ராவ் விடுதலை!

 

துபாயிலிருந்து தங்கம் கடத்திய வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவ், தனது ஓராண்டு சிறை தண்டனையை முடித்துக் கொண்டு நேற்று விடுதலையானார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாயிலிருந்து இந்தியா திரும்பிய நடிகை ரன்யா ராவ், தனது ஆடையில் ரகசியமாக மறைத்து சுமார் 14.2 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாகக் கடத்தி வந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் என்பதால், இந்தச் சம்பவம் அப்போது இந்தியத் திரைத்துறையிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கடத்தல் தொடர்பாக ரன்யா ராவ் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றக் காவலில் ஓராண்டு தண்டனை அனுபவித்து வந்த நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருடன் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரு நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த போதே இத்தகைய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு சிறை தண்டனை பெற்று தற்போது வெளியே வந்துள்ள நடிகை ரன்யா ராவ் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.