தமிழகத்தில் 15 ஐபிஎஸ் மற்றும் காவல் அதிகாரிகள் இடமாற்றம் - 4 பேருக்கு எஸ்.பி.யாகப் பதவி உயர்வு!

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தவும், நிர்வாக வசதிகளை மேம்படுத்தவும் ஏதுவாகப் புதிய தவெக அரசு 15 முக்கியக் காவல் துறை அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்ற உத்தரவின்படி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் முக்கியப் பிரிவுகளுக்குப் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்மீக நகரமான திருவண்ணாமலையின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை இவர் இனி கவனிப்பார்.

மாநிலப் பாதுகாப்பில் மிக முக்கியப் பிரிவாகக் கருதப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவின் புதிய எஸ்.பி.யாக ரமேஷ் பாபு பொறுப்பேற்கவுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட பரபரப்பான இதே நாளில், தமிழகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்குப் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சென்னைப் பெருநகரக் காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் புதிய துணை ஆணையராக கீதாஞ்சலி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகக் காவல் துறையில் நீண்ட நாட்களாக ஏ.எஸ்.பி.க்களாகப் பணியாற்றி வந்த 4 திறமையான அதிகாரிகளுக்கு, தற்பொழுது எஸ்பி-யாக தரம் உயர்த்தப்பட்டுப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிரப் பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த பணியிடங்களும் இந்த அதிரடி இடமாற்றத்தின் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.