மதுரா யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 15 சுற்றுலாப் பயணிகள் பலி! பாலத்தின் மீது மோதி விபரீதம்!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனில் உள்ள யமுனை ஆற்றில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், பிருந்தாவனில் உள்ள புனித யமுனை ஆற்றில் படகு சவாரி செய்துள்ளனர். ஆற்றில் சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாலத்தின் தூண் போன்ற அமைப்பில் இருந்த 'டிரம்' மீது படகு பலமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. முதற்கட்ட தகவலின்படி, படகின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பயணிகள் ஏற்றப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர். ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் மோனிகா மற்றும் யாஷ் ஆகிய இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் சிலர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புனிதப் பயணம் சென்ற இடத்தில் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.