15,454 பள்ளிகள்.. 15.30 லட்சம் மாணவர்கள்.. இன்று காலை 8.30 மணிக்கு திருவான்மியூர் அரசு பள்ளியில் முதல்வர் விஜய் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்!
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் உத்தரவுப்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்கு ரூ.724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன்பெறவுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும், இதர நகர்ப்புறப் பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் மூலமாகவும், ஊரகப் பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குத் திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்குச் சூடான, சுவையான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.