கனடாவில் இந்திய வம்சாவளியினர் 17 பேர் கைது - 'ஃபார் பிரதர்ஸ்' நெட்வொர்க் முறியடிப்பு!
கனடாவில் வசிக்கும் தெற்காசிய மற்றும் இந்திய வம்சாவளி வர்த்தகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்த சர்வதேச மிரட்டல் கும்பலின் முக்கிய நெட்வொர்க்கை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் வசிக்கும் தெற்காசிய வணிகர்கள் மற்றும் இந்திய சமூக மக்களைப் பணம் கேட்டு மிரட்டுதல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வந்தன. இதனைத் தடுக்க அமைக்கப்பட்ட பீல் பிராந்திய காவல் துறையின் சிறப்பு மிரட்டல் தடுப்புப் பிரிவு, சர்வதேசக் குற்றக் கும்பல் ஒன்றுக்கு எதிராக நடத்திய பல மாத ரகசிய விசாரணையின் முடிவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 'ஃபார் பிரதர்ஸ்' என்ற பயங்கரக் குற்றவியல் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2025 முதல் தொடங்கப்பட்ட இந்த 'புராஜெக்ட் பிளாட்டினம்' கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையில், கனடா நாட்டின் பீல் பிராந்திய காவல்துறை, ஒண்டாரியோ மாகாண காவல்துறை, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை, நிதிப் பரிவர்த்தனை பகுப்பாய்வு மையம் மற்றும் அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ஆகியவை இணைந்து செயல்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தப்பட்ட அடுத்தடுத்த அதிரடிச் சோதனைகளின் மூலம், 21 முதல் 32 வயதிற்குட்பட்ட 17 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஒட்டுமொத்தமாக 106 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்டவிரோதச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 6 அதிநவீனத் துப்பாக்கிகள், சட்டவிரோதப் போதைப்பொருட்கள், மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட பல மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள், போலி அடையாள அட்டைகள் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த 17 பேர் கொண்ட கும்பல் பீல் பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வணிகக் கடைகளைக் குறிவைத்து 24-க்கும் மேற்பட்ட மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. பணம் தர மறுத்த வணிகர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மீது 16 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வீடுகளுக்குத் தீ வைப்பு போன்ற வன்முறைகளிலும் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. இவர்களது தாக்குதல்களில் இதுவரை 324 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு எதிராகக் கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை தற்பொழுது தீவிரக் குடியுரிமை விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இவர்களில் 3 பேர் ஏற்கனவே கனடாவை விட்டுத் தூதரக முறைப்படி வெளியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைந்ததும் அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த இந்திய மற்றும் தெற்காசிய வணிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.