தமிழகத்தில் டெங்குக்கு 17,277 பேர், உண்ணிக்கு 4,600 பேர் பாதிப்பு - பொது சுகாதாரத்துறை தீவிரக் கண்காணிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை மொத்தம் 17,277 பேருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு உறுதியானது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் 79 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது.
டெங்கு தவிர்த்து, மாநிலத்தில் ஸ்கரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,648 ஆக உயர்ந்துள்ளது. காய்ச்சல் பரவல் எதிரொலியாக மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் தீவிரக் கண்காணிப்புப் பணிகளைப் பொது சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.