நெல்லை விறகு வியாபாரி கொலையில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது!

 

நெல்லை சுத்தமல்லி அருகே விறகு வியாபாரி ஒருவர் நேற்றிரவு மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த பகுதியில் விறகு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, நேற்றிரவு சண்முகவேல் தனியாக இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சண்முகவேலைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுத்தமல்லி காவல் துறையினர், சண்முகவேலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொடூரக் கொலை குறித்து நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த கொலையாளிகள் ஐயப்பன் (21), இசக்கி முத்து (எ) கொடி முத்து (27), சிவசங்கரன் (26), மாரி செல்வம் (21), 17 வயதுடைய இளஞ்சிறார் (சிறுவன்) ஒருவர் ஆகிய ஐந்து பேரை சில மணி நேரங்களிலேயே வளைத்துப் பிடித்தனர்.

முன்விரோதம் மற்றும் இருதரப்பு மோதல் காரணமாகவே இந்த கொலை அரங்கேறியுள்ளது என்பதை போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் கொலையின் பின்னணி குறித்தும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சுத்தமல்லி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.