நெல்லையில் 17 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை!

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துத் திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியிடம், தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 37) என்பவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 14.12.2024 அன்று போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா இவ்வழக்கில் தீவிரப் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி ராம்குமாரைக் கைது செய்தார். தொடர்ந்து, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் வலுவாக முன்வைக்கப்பட்ட நிலையில், ராம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி ராம்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்குத் திறம்படப் பணியாற்றிய அதிகாரிகளைத் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி நேரில் அழைத்துப் பாராட்டினார். நீதிமன்ற விசாரணையைத் துரிதமாகக் கண்காணித்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், புலன் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் வனிதா, நீதிமன்றத் தலைமைக் காவலர் முத்துகிளி மற்றும் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால், நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 24 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 24 குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தனிப்பட்ட கவனத்துடன் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.