“18  மலைகள் காணாமல் போயிருக்கு... ஜி-ஸ்கொயர் விவகாரம் குறித்து எஸ்.பி.வேலுமணி பதிலளிப்பார் ” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜி-ஸ்கொயர் விவகாரம், மேட்டூர் அணை திறப்பு மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேட்டியளித்தார்.

ஜி-ஸ்கொயர் நிறுவனம் குறித்த விவகாரங்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியே உரிய விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறக்கும் தேதி குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்றும், திறப்பு நிகழ்விற்கு முதலமைச்சர் வருகை தருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறினார்.

சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், செய்தித் துறை மூலம் அது மக்களிடம் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு முறைப்படுத்தப்படும் என்றார்.

ஏறத்தாழ 18 மலைகள் காணாமல் போனது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், அனைத்தும் பினாமி பெயர்களில் இருப்பதால் இதற்கு யார் உடந்தையாக இருந்தார்கள் என்பது போகப்போகத் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாலேயே அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர் எனத் தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் நிலையும் தங்கள் நிலையும் வேறுபட்டது என்றும் தெளிவுபடுத்தினார்.