ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க 18 இந்திய எம்பிக்கள் நியூயார்க் பயணம்: தமிழகத்தில் இருந்து எல்.கே.சுதீஷ் பங்கேற்பு!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இந்த மாதம் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
அக்டோபர் 5 முதல் அக்டோபர் 9 வரை ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகள் மற்றும் ஆலோசனைகளில் இந்திய எம்பிக்கள் குழு கலந்துகொள்ள உள்ளது.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், தமிழகத்திலிருந்து தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஐநா சிறார் நிதியம் மற்றும் ஐநா வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை எம்பிக்கள் குழு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
மேலும், உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயன்பாடுகள் மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்கள் குறித்து ஐநா பொதுச்செயலாளரின் தொழில்நுட்ப தூதருடன் விரிவான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவுள்ளது.