18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி... பூச்சியியல் ப்ராக்டிக்கல் வகுப்பில் நூற்றுக்கணக்கான கதண்டுகள் தாக்குதல் - பேராசிரியர் உயிரிழப்பு!
கடலூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கதண்டு கடித்ததில் உயிரிழந்துள்ள சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாபுகுளம் பகுதியில், கல்லூரி மாணவர்களுக்கான பூச்சியியல் மற்றும் தேனீ வளர்ப்பு தொடர்பான செய்முறை விளக்க வகுப்பின் போது இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு பயிலும் 18 மாணவர்கள், தங்களது கள ஆராய்ச்சி மற்றும் செய்முறைப் பயிற்சிக்காகப் பண்ருட்டி பாபுகுளம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். பூச்சியியல் துறைப் பேராசிரியரான சுரேஷ் என்பவர், மாணவர்களுக்குத் தேனீக்கள் வளர்ப்பு மற்றும் பூச்சிகளின் வாழ்விடங்கள் குறித்து நேரடியாக விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அருகில் இருந்த மரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான நச்சுத்தன்மை வாய்ந்த கதண்டுகள் திடீரெனப் பேராசிரியரையும், அங்கிருந்த மாணவர்களையும் கூண்டோடு சூழ்ந்து கொடூரமாகக் கடிக்கத் தொடங்கின.
கதண்டுகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பேராசிரியர் மற்றும் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாகப் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கதண்டுகளின் நச்சு உடலில் அதிவேகமாகப் பரவியதன் காரணமாக, பேராசிரியரான சுரேஷ் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். பூச்சிகள் குறித்து மாணவர்களுக்குக் கற்றுத் தரும் பேராசிரியரே பூச்சிகள் கடித்து உயிரிழந்த சம்பவம் சக பேராசிரியர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதண்டு கடியால் படுகாயமடைந்த 18 வேளாண் கல்லூரி மாணவர்களும் தற்பொழுது மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான நச்சு முறிவுச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்து, கதண்டு கூடுகளைக் கலைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.