பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்.. களைக்கட்டும் தீபாவளி ஷாப்பிங்... சென்னை தி.நகர், கோயம்பேடு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!

 

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனையை முன்னிட்டு தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க 25 தற்காலிக கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் 37 உதவி மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் கூட்ட நெரிசல், குற்றச் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் கண்காணிக்கப்பட உள்ளன.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, திருட்டு உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, போக்குவரத்தைச் சீரமைப்பது ஆகிய பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி, காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.