நீதி கேட்டு 18 மணி நேர மறியல்... தூத்துக்குடியில் வெடித்த மக்கள் போராட்டம் - மாணவி பாலியல் படுகொலை வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேதாந்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, ஒரு பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வேதாந்தம் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் குளத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். ஆனால், அங்குப் புகாரைப் பெறாமல் போலீஸார் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 11-ம் தேதி மாலை, வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவி முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் சடலம் மீட்கப்பட்ட செய்தி பரவியதும், வேதாந்தம் மற்றும் குளத்தூர் கிராம மக்கள் கொதித்தெழுந்தனர்.

மார்ச் 12-ம் தேதி நள்ளிரவு 12:30 மணி வரை வேதாந்தம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் நீடித்தது. மறுநாள் காலை 9 மணி முதல் குறுக்குச்சாலை - ராமேஸ்வரம் மற்றும் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த நீதி கேட்கும் போராட்டத்தில் இணைந்து, மாணவியின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மாணவி மாயமான அன்றே புகார் கொடுக்கச் சென்றபோது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீணா முறையான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய டிஐஜி சரவணன், கடமை தவறிய குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் பிரவீணாவை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இது போராட்டக்காரர்கள் மத்தியில் சிறிய நிம்மதியைத் தந்தாலும், கொலையாளிகளைக் கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

மாவட்ட எஸ்.பி. மதன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாகச் சில மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்து உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே உறுதி செய்யப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட கொல்லப்பட்ட ணவி படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் 3-ம் இடம் பிடித்து, ஊர் பெரியவர்களிடம் தங்க மோதிரம் பரிசு பெற்றவர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு பிளஸ்-2 பயோ-மேக்ஸ் குரூப் எடுத்துப் படித்து வந்தார். இன்று இயற்பியல் தேர்வு எழுத வேண்டிய நிலையில், அவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே ஆறாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.