கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் உயிரிழப்பு - நாகாலாந்தில் அதிர்ச்சி!

 

மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில், கள்ளச்சாராயம் மற்றும் கலப்பட மதுவை அருந்தியதன் காரணமாக அடுத்தடுத்து 19 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1990-ஆம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில், மோகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், துயன்சாங் மாவட்டத்தில் 11 பேரும் என மொத்தம் 19 பேர் கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விஷச்சாராய விவகாரத்தின் பின்னணியில் உள்ள மதுவின் விநியோகச் சங்கிலியை முழுமையாகக் கண்டறிவதற்காக, ஏஎஸ்பி ஐ. புங்லாங் சாங் தலைமையில் பிரத்யேகச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 19 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, கலப்படத்தின் தன்மையை அறிவதற்காக மது மாதிரிகள் சோதனைக்காகக் குவஹாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.