தமிழகத்தில் 6 புதிய நர்சிங் கல்லூரிகள், செவிலியர் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு! 

 

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை மேம்படுத்தும் வகையில், ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், பல்வேறு செவிலியர் படிப்புகளில் ஆயிரக்கணக்கான கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இதனுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 இடங்களுடன் ஏழாவது கல்லூரியும் உருவாக்கப்பட உள்ளது.

இதற்கான ரூ.270.26 கோடி செலவினம் முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்து ஏற்கப்படுகிறது. கட்டடப் பணிகள் நடைபெறும் இடைப்பட்ட காலத்தில், அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடவசதியைப் பயன்படுத்தி நடப்பு கல்வியாண்டிலேயே (2026-2027) 600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மொத்தம் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் டி.ஜி.என்.எம். படிப்பில் 1,290 இடங்களும், பி.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 440 இடங்களும், எம்.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 75 இடங்களும், பட்டப்படிப்புக்குப் பிந்தைய பி.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 120 இடங்களும் அடங்கும்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 2,585 கூடுதல் செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுவதால், பெரும்பாலும் கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் செவிலியர் பணிக்கான வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.