1996 ராஜஸ்தான் குண்டுவெடிப்பு வழக்கு.. மரண தண்டனையை ரத்து செய்து மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

 

கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவைச் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 1996 மே 22 அன்று ஆக்ராவிலிருந்து பிகானேர் சென்று கொண்டிருந்த பேருந்தில், ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் சம்லேட்டி அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். இவ்வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்பட்ட அப்துல் ஹமீதுக்கு மரண தண்டனையும், பப்பு (எ) சலீம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ஹமீதுக்கு சட்டரீதியான போதிய வழக்கறிஞர் உதவி  வழங்கப்படவில்லை என்பதைக் சுட்டிக்காட்டி, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இவருக்கு எதிரான வழக்கை மூத்த நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் அமைத்து 1 ஆண்டுக்குள் புதிதாக விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பப்பு (எ) சலீமை வழக்கில் இருந்து முற்றிலும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.