10ம் வகுப்பு சிறுவன் கழுத்தறுத்து படுகொலை - 2 பேர் கைது!

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் மிகக் கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 2 வாலிபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று அச்சிறுவன், அந்த பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறிய நிலையில், அவர்களுக்கிடையே திடீரென கடுமையான வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் அந்த 10ம் வகுப்பு சிறுவனின் கழுத்தை மிகக் கொடூரமான முறையில் அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

சிறுவன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்துத் தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றினர். மேலும், இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் அதிரடி விசாரணையில், இக்கொடூர கொலையில் நேரடியாகத் தொடர்புடைய அரவிந்த் மற்றும் கணேசன் ஆகிய இருவரைப் போலீசார் தற்பொழுது மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் உட்காரணங்கள் இருக்கிறதா அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிச் சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.