சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிறையில் அடைப்பு - தூத்துக்குடியில் அட்டூழியம்!
தூத்துக்குடி மாவட்டம், கீழ வல்லநாடு பகுதியில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (42) மற்றும் வல்லநாட்டைச் சேர்ந்த வேல்துரை (27) ஆகிய இருவர் கீழ வல்லநாடு பகுதியில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய வைத்திருந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, இசக்கிபாண்டி மற்றும் வேல்துரை ஆகிய இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.