புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ₹1.54 லட்சம் மோசடி - தென்காசியில் 2 பேர் கைது!
தென்காசி மாவட்டத்தில் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறிப் பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த இரண்டு போலி மாந்திரீகர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகரைச் சேர்ந்த வேல்முருகன் (54) மற்றும் ஆய்க்குடி அருகே விந்தன்கோட்டையைச் சேர்ந்த குமார் (47) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர்களான இருவரும் தங்களுக்கு மாந்திரீகம் மற்றும் சூனியக் கலைகள் தெரியும் எனக் கூறிப் பல்வேறு ஊர்களில் சுற்றி வந்துள்ளனர்.
தென்காசியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடியில் புதையல் இருப்பதாக நம்ப வைத்த இவர்கள், அதைத் தோண்டி எடுப்பதற்குச் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி ரூ.1.54 லட்சத்தைப் பெற்றுள்ளனர். பூஜைக்குப் பிறகும் புதையல் கிடைக்காததாலும், பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த வேல்முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.