அதிகாரிகளின் அலட்சியத்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு... அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்கசிவு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில், உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி காலை ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி, தம்பி மோகன் - லதா தம்பதியரின் குழந்தைகளான 11 வயது நிறைமதி மற்றும் 6 வயது பால பிரவீன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செயல்படாமல் இருந்த அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பே மின்கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு மற்றும் துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.