2 தலைகள், ஒரே இதயம்... ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - தாயின் உயிரிழப்பால் சோகம்!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில், அபூர்வமான முறையில் இரண்டு தலைகள் மற்றும் ஒரே இதயத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. எனினும், குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலி காரணமாக அங்குள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மார்ச் 17ம் தேதி, அவருக்குச் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
பிறந்த குழந்தைகளுக்கு தலைகள்: 2, கைகள்: 2, கால்கள்: 4, இதயம்: 1 (ஒரே இதயம் இரு குழந்தைகளுக்கும் பொதுவாக உள்ளது) தற்போது இந்தக் குழந்தைகள் சாதாரணக் குழந்தைகளைப் போலவே பால் குடித்து வருவதாகவும், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒரே இதயம் இருப்பதால் வருங்காலத்தில் அறுவை சிகிச்சை செய்வதிலோ அல்லது குழந்தைகளின் வளர்ச்சியிலோ சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாய் நீருவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குழந்தைகளைப் பார்க்காமலேயே தாய் உயிரிழந்தது அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் மருத்துவத் துறை இவ்வளவு முன்னேறிய காலத்திலும், இது போன்ற மரபணு மாற்றங்கள் மற்றும் இயற்கையின் விந்தைகள் மனிதர்களை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்தி வருகின்றன.