இந்திய வம்சாவளியினர் 2 பேர் பிரிட்டன் அமைச்சரவையில் மந்திரிகளாக பொறுப்பேற்பு!

 

பிரிட்டனின் புதிய பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்றுள்ள நிலையில், அவரது புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்க நாராயண் மற்றும் லிசா நந்தி ஆகிய இருவருக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பீகார் மாநிலம் முசாபர்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட கனிஷ்க நாராயண் (36), தனது 12-வது வயதில் பெற்றோருடன் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், பிரிட்டனின் முதல் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வேல்ஸ் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரான இவர், புதிய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் பொறுப்பைப் பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீபக் நந்தியின் மகளான லிசா நந்தி (46), மான்செஸ்டரில் பிறந்தவர். முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், தற்போது ஆன்டி பர்ன்ஹாம் அமைத்துள்ள புதிய அமைச்சரவையிலும் அதே டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகத் தொடர்ந்து நீடிக்கிறார்.

புதிய பிரதமரின் கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு திறமையான தலைவர்கள் இடம் பெற்றுள்ளது உலகளவில் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.