மதுரையில் கோர விபத்தில் 2 ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பு... லாரியிலிருந்து விழுந்த இரும்பு ராடு பைக் மீது மோதிய கொடூரம்!
மதுரை மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியிலிருந்து எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த ராட்சத இரும்பு ராடு பைக் மீது மோதியதில், இரண்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சித்தாலங்குடியைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் (28) மற்றும் ராகுல் (26). இருவரும் பிரபல ஜல்லிக்கட்டு வீரர்களாவர். நேற்று முன் தினம் நள்ளிரவு மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை முந்திச் சென்ற கனரக லாரி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட ராட்சத இரும்பு ராடு திடீரென நழுவிக் கீழே விழுந்தது.
லாரியிலிருந்து விழுந்த அந்த இரும்பு ராடு வேகமாக பின்னாலேயே வந்து கொண்டிருந்த இவர்களது பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.