சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான அரசு அதிகாரியின் வங்கி லாக்கர்களில் 2 கிலோ தங்கம், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல்!

 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானா மாநில அரசு உயர் அதிகாரியின் வங்கி லாக்கர்களை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தியதில், மேலும் 2 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், 12 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 1.50 கோடி ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநில நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையின்  துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த நரஹரி ராவ் என்பவர், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் அண்மையில் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.  நரஹரி ராவின் சொத்து விபரங்களைத் தொடர்ந்து புலனாய்வு செய்து வந்த அதிகாரிகள், ஹைதராபாத் சாலி பண்டா பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் அவரது மனைவியின் பெயரில் 2 ரகசிய லாக்கர்கள் இருப்பதை அண்மையில் கண்டறிந்தனர்.

ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த 2 வங்கி லாக்கர்களையும் அதிரடியாகத் திறந்து சோதனையிட்டனர். இந்தச் சோதனையில், கணக்கில் வராத 1.50 கோடி ரூபாய் ரொக்கப் பணம் தனிப் பைகளில் மூட்டையாகக் கைப்பற்றப்பட்டது.

இவற்றுடன், தலா 100 கிராம் எடையுள்ள 12 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் அரிய வகை வைர ஆபரணங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 2 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பு மட்டும் பல கோடிகளைத் தாண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அதிகாரி நரஹரி ராவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஜூன் 16-ஆம் தேதியே ஊழல் தடுப்புப் பிரிவினர் முதற்கட்ட சோதனையை நடத்தியிருந்தனர். கடந்த வாரம் நடைபெற்ற சோதனையின் போதே அவரது வீட்டிலிருந்து ரூ.1.54 கோடி ரொக்கப் பணம், 1.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 8 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஹைதராபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் அவர் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கப்பட்டிருந்த ரூ.150 கோடிக்கும் அதிகமான கள்ளச் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டன.

துணை இயக்குநர் நரஹரி ராவ் அரசுப் பணியைப் பயன்படுத்தித் தனது அதிகாரத்தின் மூலம் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்து சொத்துகளைக் குவித்துள்ளது அம்பலமாகியுள்ளது. வங்கி லாக்கர்களில் மேலும் 2 கிலோ தங்கமும், கோடிக்கணக்கான பணமும் சிக்கியுள்ளதால், இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய மற்ற இடைத்தரகர்கள் மற்றும் பினாமிகளை நோக்கி ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தங்களது அடுத்தகட்டப் புலனாய்வை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளனர்.