சரக்கு வாகனம் மோதி தவெக நிர்வாகி உட்பட 2 பேர் பலி - மற்றொருவர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதிய கோர விபத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகனம் ஒன்று, சாலையோரமாகச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடியது. இந்த விபத்தில் தவெக நிர்வாகி குகன் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு பைக்கில் சென்றவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த சிதம்பரம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.