வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 2 பேர் பலி;3 பேர் படுகாயம்! 

 

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள செவாயூர் குரிக்கத்தூர் பகுதியில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

செவாயூர் குரிக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், உரிய அனுமதி பெறாமல் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று இரவு திடீரென அங்குள்ள வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த ராகுல் (26) மற்றும் அவரது மைத்துனரான மற்றொரு ராகுல் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாயினர். ஒரே பெயரைக் கொண்ட மைத்துனர்கள் இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த விஷ்ணு (28), அவரது மனைவி சினி (27) மற்றும் ஹிஜித் (36) ஆகிய மூவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செவாயூர் போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் எவ்வித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், ரகசியமாகப் பட்டாசு தயாரித்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.