ஆற்றங்கரையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 2 ஆண் யானைகள்!
மேற்கு வங்காள மாநிலத்தில் கங்சாபதி ஆற்றங்கரையில் இரண்டு மாபெரும் ஆண் யானைகள் நேருக்கு நேர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்சாபதி ஆற்றின் கரையில் நின்றிருந்த இரண்டு ஆண் யானைகள் திடீரென ஒன்றை ஒன்று தாக்கிப் பயங்கரமாக மோதிக்கொண்டன. தங்களது பலம் கொண்ட தலைகளாலும் தந்தங்களாலும் முட்டி ஆக்ரோஷமாகத் தள்ளிக் கொண்டன. யானைகள் கோபத்தில் எழுப்பிய உரத்த பிளிறல் சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
யானைகள் சண்டையிடும் தகவல் பரவியதை அடுத்து, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, சற்று தொலைவில் நின்று கொண்டு அச்சம்பவத்தைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
ஒருகட்டத்தில் சண்டையை நிறுத்திக்கொண்ட இரு யானைகளும் பிரிந்து மக்கள் கூடியிருந்த திசையை நோக்கியே நடந்து வந்ததால், பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்துச் சிதறி ஓடினர். கோபத்தில் இருக்கும் யானைகள் தாக்கி விடுமோ என்ற பீதி அப்பகுதி மக்களிடையே இன்னும் விலகவில்லை. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.