2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா - வைகோவுக்கும் உயர்பதவி... செங்கோட்டையன் சிக்னல்!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, அவை மரபுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கோட்டை வளாகத்தில் அரங்கேறியுள்ள முக்கிய அரசியல் நகர்வு, மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போகிறார்களா என்ற புதிய விவாதத்தையும், தமிழக அரசியல் களத்தில் அடுத்த திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் மரபுவழி உரை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவையிலிருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொன்றாக வெளியேறினர். ஆனால், அவைக்குள் நிலவிய ஒரு விசித்திரமான சூழல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி செந்தில் செல்வன் ஆகிய இருவர் மட்டும் அவையிலிருந்து உடனடியாக வெளியேறாமல் தங்களது இருக்கைகளிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கிச் சென்ற தவெக கூட்டணி அரசின் முன்னணி அமைச்சர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், மதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கும் கைகுலுக்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், சைகை மூலமாகத் தனது அமைச்சர் அறைக்கு வருமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துச் சென்றார்.
அமைச்சர் செங்கோட்டையனுடனான இந்த சந்திப்பைத் தொடர்ந்து, மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.
நடந்து முடிந்த தேர்தலில் மதிமுக, திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. தற்போது தவெக அரசை மதிமுக தலைமை ஆதரித்து வரும் சூழலில், சின்னம் காரணமாக அவர்களால் சட்டசபைக்குள் திமுகவின் கொறடா உத்தரவை மீறித் தவெகவிற்கு ஆதரவாகச் செயல்பட முடியாத சட்ட நெருக்கடி நீடிக்கிறது.
இந்தச் சட்டச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்களது எம்.எல்.ஏ. பதவிகளைத் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்துவிட்டு, வைகோவின் வழிகாட்டுதலின்படி தவெக கூட்டணியில் மதிமுகவை முழுமையாக ஐக்கியப்படுத்த இவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக (அமைச்சர் அந்தஸ்தில்) நியமிக்க முதலமைச்சர்விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த 2 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா யூகங்கள் அதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இதன் மூலம், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக முற்றிலும் வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால், தவெகவின் ஆதரவோடு மதிமுக தங்களது சொந்தப் 'பம்பரம்' சின்னத்திலேயே களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.