மதுரை அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காகக் காரில் சென்றுள்ளனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அவர்கள் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நகரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அவர்கள் பயணம் செய்த கார் திடீரென மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலுமாக நசுங்கியது. விபத்தில் சிக்கியவர்களில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.