மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!

 

இந்தியப் பிரிவினைக்கு முன்பாக முகம்மது அலி ஜின்னாவின் தீவிர உடல்நலக் குறைபாடு குறித்த ரகசியத்தைக் காத்து, பாகிஸ்தான் உருவாக மறைமுகக் காரணமாக இருந்த மும்பையைச் சேர்ந்த இரண்டு மறைந்த இந்திய மருத்துவர்களுக்குப் பாகிஸ்தான் அரசு தனது உயரிய விருதை அறிவித்துள்ளது.

கடந்த 1946-ஆம் ஆண்டு, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில் பார்சி சமூகத்தைச் சேர்ந்த மும்பை மருத்துவர்கள் டாக்டர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் டாக்டர் ஜல் தய்போ-கூ ஆகியோர் முகம்மது அலி ஜின்னாவுக்குக் கடுமையான காசநோய் (Tuberculosis) இருப்பதை எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் கண்டறிந்தனர்.

ஜின்னா இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்ற உண்மை தெரிந்தும், மருத்துவர்கள் இருவரும் அதைத் தொழில் தர்மத்தின்படி இறுதிவரை ரகசியமாகப் பாதுகாத்தனர். இந்த ரகசியம் மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கோ, மகாத்மா காந்தி அல்லது ஜவஹர்லால் நேருவுக்கோ தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் அரசு இந்தியப் பிரிவினையைத் தள்ளிப்போட்டிருக்கக்கூடும் என்றும், தனி நாடு உருவாக்கம் தடைபட்டிருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மருத்துவத் தர்மத்தைக் காத்து, பாகிஸ்தான் தனி நாடாக உருவாவதற்கு முக்கியக் காரணமாக அமைந்த இந்த ரகசியத்தைப் பேணியதற்காக, இரு மருத்துவர்களுக்கும் பாகிஸ்தானின் உயரிய 'நிஷான்-ஏ-இம்தியாஸ்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள  விழாவில் வழங்கப்பட உள்ளன.