சென்னையில் அரசுப் பள்ளி வளாகத்தில் +2 மாணவன் அடித்துக் கொலை!
சென்னை திருவொற்றியூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 12-ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (19) என்ற மாணவன், அங்குள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விம்கோ நகர் ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு அருகே உள்ள பின்புறப் பகுதியில், மாணவன் தனுஷ் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார், தனுஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலருடன் தனுஷிற்கு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த அடித்துக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.