பயங்கரம்: அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை, அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அடுத்த சாமியார் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார்–காவ்யா தம்பதியரின் மகள் வினோதினி, இன்று காலை தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்து எதிர்பாராத விதமாகச் சிறுமி மீது ஏறியதில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.
வழக்கமாக இந்தப் பகுதியில் இயக்கப்பட வேண்டிய 19-ஆம் எண் பேருந்து பழுதானதால், அதற்குப் பதிலாக 4-ஆம் எண் பேருந்து மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுள்ளது. குறுகலான சாமியார் நகர் பகுதியில் பேருந்து திரும்ப முயன்றபோது, ஓட்டுநரின் கவனக்குறைவால் வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தை மீது பின்சக்கரம் ஏறியதாகக் கூறப்படுகிறது. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மாரண்டஅள்ளி போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.