தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவால் தமிழகத்தில் 59 ஆக உயரும் நாடாளுமன்ற தொகுதிகள்!

 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும் எனத் தெரிகிறது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கத் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை 3 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். எனினும், இந்தக் கூட்டத்தை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாடாளுமன்ற இரு அவைகளில் மசோதா நிறைவேறினால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தொகுதிகள் உயர்ந்தால் திருத்தணி, திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, சென்னை மேற்கு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பெயர்களில் புதிய தொகுதிகள் உருவாகலாம். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி / ஆரணி மற்றும் திண்டிவனம் உள்ளிட்ட உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது.