இன்று முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 20 கூடுதல் ரயில்கள் இயக்கம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாகப் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காகத் தாம்பரம் - கடற்கரை இடையே இன்று முதல் 20 கூடுதல் விரைவு சிறப்பு மின்சார ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
சாதாரண மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் விரைவாகச் சென்றடையவும் இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விரைவு சிறப்பு ரயில்கள் அனைத்து நிலையங்களிலும் நிற்காது. மாம்பலம், கிண்டி மற்றும் எழும்பூர் ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
இந்த ரயில்கள் தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கும் வெறும் 1 மணி நேரத்தில் சென்றடையும். இந்தத் தகவலைத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்காக இலவசப் பேருந்து சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விரைவு ரயில்கள் பயணிகளுக்குக் கூடுதல் நிம்மதியை அளிக்கும்.